ஓடும் ரயிலில் 'பெப்பர் ஸ்பிரே'... 5 கிலோ நகை கொள்ளை முயற்சி: சிக்கிய கேரள கொள்ளையர்கள்!


ஓடும் ரயிலில் 5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடிக்க முயன்ற கேரளாவைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்கள் போலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுராம் (45). இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆபரண தங்க நகைகள் ஆர்டர் எடுத்து நகைகளை செய்து கொடுத்து வருகிறார். அத்துடன் கோவை செல்வபுரத்தில் நகை பட்டறையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்த 3 கோடி மதிப்புள்ள 5 கிலோதங்க நகைகளை, விநியோகம் செய்வதற்காக தன்னிடம் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த நகைத் தொழிலாளர்களான மாரிமுத்து (30), அய்யனார்(26) ஆகியோரிடம் கொடுத்து அனுப்பினார். அவர்கள் சென்னைக்கு ரயிலில் நகைகளைக் கொண்டு சென்றனர். அதே பெட்டியில் பயணம் செய்த மர்மநபர்கள் இருவர், நகைத் தொழிலாளர்களிடம் இருந்த 5 கிலோ தங்க நகைகளை நள்ளிரவில் திருட முயன்றனர்.

அப்போது திடுக்கிட்டு கண் விழித்த மாரிமுத்து மற்றும் அய்யனார் ஆகிய இருவரின் முகத்திலும் மர்ம நபர்கள் ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்தனர். இதனால் இருவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டு கூச்சலிட்டனர். அவர்கள் சத்தம் கேட்டு சக பயணிகள் விழித்துக் கொண்டதால், மர்நபர்கள் நகைப்பையை அங்கேயே விட்டு விட்டு ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். அத்துடன் பெப்பர் ஸ்பிரேவினால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின் நகை தொழிலாளி மாரிமுத்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து மூன்று தனிப்படை போலீஸார் கொள்ளையர்களைத் தேடினர்.

அப்போது ஜோலார்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சுற்றித் திரிந்த 2 பேரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரப்(30), சூரஜ்(26) என்பது தெரியவந்தது. இவர்கள் தான் ரயிலில் 5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

x