13 இடங்களில் காயம்: வாலிபர் விக்னேஷ் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி!


விக்னேஷ்.

சென்னையில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறந்து போன விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தலைமை செயலக காலனி காவல்துறையினர் ஏப்ரல் 18-ம் தேதி புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் கஞ்சா மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணையில் அவர்கள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ்(28), பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்(28) என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், விக்னேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக, எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், விக்னேஷ் மரணம் தொடர்பான உடற்கூராய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதில், விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷின் தலை, கண் புருவம், தாடை பகுதிகளில் காயம் இருந்ததாகவும், வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரத்தக்கட்டுகள் காணப்படுவதாகவும், லத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளங்களும் உடலில் காணப்படுகிறது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிப்பு வந்து இறந்ததாக கூறப்பட்ட வாலிபரின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x