திருடப் போன இடத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை: ஆத்திரத்தில் கொள்ளையர்கள் விபரீத செயல்


செங்கல்பட்டு பகுதியில் கோயிலில் திருடச் சென்ற திருடர்களுக்குப் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள் எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் அங்குள்ள குடிசை மற்றும் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பித்திருக்கிறார்கள். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தில் குன்றின் மீது சிவன் கோயில் உள்ளது. குன்றின் மீது உள்ள கோயில் என்பதால் பகல் நேரங்களில் மட்டுமே அதிக அளவு பக்தர்கள் வருவார்கள். இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்படும். இதைப் பயன்படுத்தி நேற்று நள்ளிரவு சில மர்ம நபர்கள் மலையில் உள்ள கோயிலுக்கு திருட வந்திருக்கிறார்கள். அங்குள்ள சி.சி.டி.வியில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக சி.சி.டி.வி கேமரா வயர்களை துண்டித்து இருக்கிறார்கள்.

அவர்கள் சல்லடை போட்டுச் சலிக்காத குறையாகப் பல இடங்களில் தேடியும், எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த கொள்ளையர்கள் அருகிலிருந்த கூரை கொட்டகை மற்றும் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். தீ மளமளவெனக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதைக் கண்ட புலிப்பாக்கம் மக்கள் செங்கல்பட்டு காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் உடனடியாக அங்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடிசைக்குள் இருந்த இரண்டு லட்சம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை தீயில் கருகியது. செங்கல்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

x