8 டன் ரேசன் அரிசி கடத்தல்: ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்


கேரளத்திற்கு கடத்த முயன்ற 8 டன் ரேசன் அரிசியைக் குமரிமாவட்ட போலீஸார் ஸ்கெட்ச் போட்டுப் பிடித்தனர். கேரளத்திற்கு தொடரும் ரேசன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீஸாரின் இந்தத் தடாலடி நடவடிக்கை பலரது பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்துவது நீண்டகாலமாகவே நடந்து வருகிறது. இதை முற்றாகத் தவிர்க்கும்வகையில் கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை சார்பில் 32 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதையெல்லாம் தாண்டி கடத்தலும் தொடர்ந்த வண்ணமே இருந்தது. இப்படியான சூழலில் தான் ரேசன் அரிசி கடத்தலை முற்றிலும் ஒழிக்கும்வகையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பை அதிகப்படுத்தியதோடு, ரோந்துப் பணியினையும் முடுக்கிவிட்டார்.

அந்தவகையில் களியக்காவிளை எஸ்.ஐ சிந்தாமணி தலைமையிலான போலீஸார் இன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது குழித்துறை பகுதியில் தார்பாலின் ஷீட் போட்டு மூடப்பட்ட லாரி ஒன்று வந்தது. போலீஸார் அந்த லாரியைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 8 டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. லாரியை ஓட்டிவந்த பெருஞ்சிலம்பு பகுதியைச் சேர்ந்த திஏஷ்குமார்(25) என்ற வாலிபரை கைது செய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளத்தின் காட்டாக்கடைக்கு இந்த ரேசன் அரிசிகளைக் கொண்டுசெல்வது தெரியவந்தது. குமரிமாவட்டக் காவல்துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட அரிசியானது, குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

x