சென்னை ஓட்டேரியில் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் வினிதா (35). இவரது கணவர் விஜய்குமார் ஜெயின் கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். கடந்த எட்டு மாதங்களாக வினிதா, தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னை ஓட்டேரி ஸ்டீபென் சாலையில் உள்ள நார்த் டவுன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது தம்பி தினேஷ்குமார் வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவரது இரண்டரை வயது பெண் குழந்தை கவாஷ் வீட்டில் ஜன்னல் ஓரம் இருந்த ஷோபாவின் மீது ஏறி ஜன்னல் கதவை திறந்து விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை கவாஷ் 7-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் வினிதா இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் போலீஸார் குழந்தை உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னை மண்ணடியில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து 18 மாத குழந்தை ஆசியா, கொண்டித்தோப்பில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை அயன், அம்பத்தூரில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை கிஷோர், சூளைமேட்டில் 3-வது மாடியில இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை முகமதுநசீர் உள்ளிட்டோர் பலியான சம்பவத்தை தொடர்ந்து நேற்று ஓட்டேரியில் இரண்டரை வயது குழந்தை கவாஷ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெற்றோருக்கு இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை வீட்டில் தனியாக விளையாடும் போது ஜன்னல், கதவு, பால்கனி கதவு ஆகியவை முறையாக பூட்டப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் குழந்தைகள் விளையாடும்போது பெற்றோர் கண்பார்வையில் இருந்து செல்லாத வண்ணம் அவர்களை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு வழிமுறைகளை மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிக்க முடியும்.