நெல்லை அருகே துப்பட்டாவால் பெண் கழுத்தை இறுக்கிக் கொலை செய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு பெண் உள்ளிட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே பழைய பேட்டை செல்லும் வழியில் ஆதம்நகர் உள்ளது. அங்குள்ள சாலையோரம் பெண்ணின் உடல் தீயில் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். பேட்டை காவல் ஆய்வாளர் ஹரிஹரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தீயை உடனடியாக அணைத்தனர். ஆனால், அதற்குள் அந்த பெண்ணின் உடல் முழுவதும் எரிந்து போனது. மாநகர தடயவியல் நிபுணர் வேல்முருகன் அங்கு கிடைத்த தடயங்களைச் சேகரித்தார். பெண்ணின் பிணத்தை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்த பெண்ணிற்கு 50 வயதிற்கு மேல் இருக்கும் என்றும், கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் சோதனை செய்தனர். அத்துடன் அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பழைய பேட்டை பகுதியில் இருந்து ஆட்டோவில் வந்த இரண்டு பெண்கள் இறங்கி சென்றதும், சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு பெண் மட்டும் ஆட்டோவில் ஏறிச் சென்றதும் தெரிய வந்தது. எனவே, ஆட்டோவில் வந்த பெண் தான், இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து தனிப்படை போலீஸார், ஆட்டோவில் வந்த பெண்யார், ஆட்டோ ஓட்டுநர் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.