விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் எஸ்.டி.டி. என்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலையில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதில், சோலை விக்னேஸ்வரன் (25) என்ற வாலிபர், பட்டாசுக்கு தேவையான ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்துள்ளார். அப்போது, ஏற்பட்ட உராய்வு காரணமாக, வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் ஒரு அறையே தரைமட்டமானதால் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். வெடி விபத்தில் சிக்கி இன்னும் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் பட்டாசு ஆலை விபத்துகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.