ஊதுவத்தி ஏற்றிவந்த லாரிக்குள் ரகசிய அறை அமைத்து அதில் ஒரு டன் குட்கா பொருட்களை கடத்தி வந்த வந்த லாரியை கும்பகோணம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு, கண்டெய்னர் லாரியில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று இரவு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் மற்றும் போலீஸார், கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வாகனங்களை தீவிர சோதனை செய்தனர்.
அப்போது அங்கு கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து, ஊதுபத்தி ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஊதுபத்தி பெட்டிகள் மட்டும்தான் இருந்தது. ஆனால் போலீஸாருக்கு அந்த லாரிமீது ஏனோ சந்தேகம் வந்தது. அதனையடுத்து போலீஸார், லாரியின் கண்டெய்னரின் நீளத்தை ஆய்வு செய்த போது, ஊதுவத்தி வைக்கப்பட்டிருந்ததைவிட அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து கண்டெய்னருக்குள் இன்னும் தீவிரமாக சோதனை செய்தபோது அதில் தனியாக ரகசிய அறை ஒன்று இருப்பது தெரியவந்தது. அதற்குள் சுமார் 1 டன் குட்கா புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து கண்டெய்னர் லாரியையும், 1 டன் குட்கா புகையிலையையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். லாரி ஓட்டுநர் மற்றும் அங்கிருந்தவர்களிடம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீரன் அதிகாரம் திரைப்படத்தில் வருவதுபோல், குட்கா புகையிலையை தனி அறை அமைத்து கொண்டு வந்துள்ளதை கண்டறிந்த தனிப்படை போலீஸாருக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.