கோவை அருகே மூதாட்டியிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரியில் படிக்கும் காதல்ஜோடி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம்.தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 65). இவர் மே 28-ம் தேதி வழக்கம் போல ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு டூவீலரில் இளம்பெண்ணுடன், ஒரு வாலிபர் வந்துள்ளார். தீணையப்பு நிலையம் அருகே சாலையில் மூதாட்டியிடம் அந்த வாலிபர் முகவரி கேட்டுள்ளார். திடீரென மூதாட்டி கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் நகையைப் பறித்துக் கொண்டு இளம்பெண்ணுடன் அந்த வாலிபர் டூவீலரில் தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீஸில் காளியம்மாள் புகார் செய்தார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது மூதாட்டியிடம் நகையைப் பறித்தவர் கோவை வடவள்ளி சோமையம்பாளையம் அருகே உள்ள காஸ்மா கார்டனைச் சேர்ந்த பிரசாத் (20) என்பது தெரிய வந்தது. அவருடன் இருந்தவர் கோவை சுங்கம் ரோடு ஸ்ரீ நகர் முதல் வீதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேஜாஸ்வினி (20) என்பதும், இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. காதலர்களான இவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். சொகுசு வாழ்க்கை நடத்துவதற்காக அவர்கள் நகைபறிப்பில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பொறியியல் கல்லூரி ஜோடி நகைபறிப்பில் ஈடுபட்ட சம்பவம் காவல்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.