`பணத்தை கேட்டதால் தோழியை கொன்றேன்'- சடலத்தை கடலில் வீசிய நண்பர் அதிர்ச்சி வாக்குமூலம்


நண்பர் ஒருவர், தனது தோழியை கொன்று சடலத்தை கடலில் வீசிச் சென்ற கொடூர சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.

மும்பையில் உள்ள வர்சோவாட கடற்கரையில் சாக்கு மூட்டையில் இளம் பெண் ஒருவரின் சடலம் ஒதுங்கியிருப்பதாக காவல் துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, உயிரிழந்த பெண் சோனம் ஸ்ரீகாந்த் என்று தெரியவந்ததோடு, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். ஒருவர் சாக்கு மூட்டையைத் தூக்கி வருவது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சபித் அன்சாரி என்ற அந்த இளைஞரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த இளைஞர் சொன்ன தகவல் காவல் துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது.

சோனம் ஸ்ரீகாந்தும், சபித் அன்சாரியும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். இதனால் அன்சாரி தோழி சோனத்திடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனிடையே, தான் கொடுத்த பணத்தை சோனம் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அன்சாரி பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சோனம், பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் காவல் துறையில் புகார் கொடுத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, 2 ஆயிரத்தை மட்டும் கொடுத்த அன்சாரி, மீதி பணத்தை பிறகு தருவதாக சோனத்திடம் கூறியுள்ளார். ஆனால் முழு பணத்தையும் கொடுக்க வேண்டும் என சோனம் வலியுறுத்தியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அன்சாரி, சோனத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு அவரது உடலை சாக்கு மூட்டையில் அடைத்து கடலில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அன்சாரியைக் கைது செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் தோழியையே இளைஞர் ஒருவர் கொலை செய்து கடலில் உடலை வீசிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

x