குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் மீன்வெட்டும் கத்தியால் 2 பேரை ஓட ஓடவிரட்டி வாலிபர் கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூர் மீனவ குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண் (25), சதீஷ்(25), தினேஷ் (25). நண்பர்களான இவர்கள் நேற்று இரவு மது அருந்தி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அருண் விளையாட்டாக, செருப்பை தினேஷ் மீது எறிந்துள்ளார். அது சாப்பாட்டில் விழுந்தது. இதனால் தினேஷீக்கும், அருணுக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது அருணுடன் சதீஷ்குமாரும் சேர்ந்து தினேஷைத் தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், வீட்டிற்குச் சென்று மீன்வெட்டும் கத்தியை எடுத்து வந்தார். அருணின் வயிற்றில் கத்தியால் குத்தவும், அதைப் பார்த்து சதீஷ்குமார் தப்பியோடி ஓடியுள்ளார். ஆனால், அவரை துரத்திச் சென்று தினேஷ் குத்திக் கொலை செய்தார். இதன் பின் திருவான்மியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தனது இரண்டு நண்பர்களை அவரது நண்பரே குத்திக் கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.