ஆன்லைன் கந்து வட்டிக் கும்பலிடம் இருந்து தப்பிக்க தன்னிடம் கடன் வாங்கி விட்டு பணத்தை திருப்பி கேட்டதால் தன் மீது பொய் புகார் கொடுத்ததாக சின்னத்திரை நடிகரின் மனைவி சுஜிதாவுக்கு எதிராக ஆடியோ ஆதாரங்களுடன் சென்னை காவல் துறை ஆணையரிடம் நடிகர் வாராகி அடுக்கடுக்கான புகார் அளித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடிகர் வாராகி (46). இவர் "சிவா மனசுல புஷ்பா" திரைப்படத்தை இயக்கி நடித்துள்ள இவர் பத்திரிகை ஒன்றையும் நடத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி மறைந்த சின்னத்திரை நடிகரின் மனைவியான சுஜிதா என்ற பெண்ணை, வாராகி 3-வதாக திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் வாராகியை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த நடிகர் வாராகி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கடந்த 2016-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகர் சாய்பிரசாத்தின் மனைவி சுஜிதா தனது தாய் ராதா மற்றும் தந்தை செல்வராஜ் ஆகியோருடன் தன்னை அணுகி, குடும்ப சூழலை காரணம் காட்டி தன்னிடம் வேலை கேட்டதாகவும், அதனால் மனிதாபிமான அடிப்படையில் தான் நடத்தி வரும் பத்திரிகை அலுவலகத்தில் சுஜிதாவிற்கு ஒரு வேலை கொடுத்து பணியமர்த்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சுஜிதா தன்னிடம் வேலை பார்த்து வந்த நிலையில், அலுவலக தொலைபேசியில் இருந்து தனக்கு அறிமுகமான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்களை எடுத்து அவர்களிடம் நள்ளிரவு நேரங்களில் தவறான நோக்கத்துடன் தொடர்புகொண்டு பேசி பணம் பறிப்பதாக தனக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.
அதன் காரணமாக சுஜிதாவை தான் வேலையில் இருந்து நிறுத்தியதாகவும், பின் அவர் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரி, மீண்டும் வேலை கேட்டதாக கூறினார். ஆனால் சுஜிதாவை மீண்டும் பணியில் சேர்க்காமல் தவிர்த்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பின் கடந்த 17-ம் தேதி தன்னை செல்போனில் தொடர்புகொண்ட சுஜிதா, தான் ஆன்லைன் மூலம் கடன் பெற்ற நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாததால், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தன்னை வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்தக்கூறி மிரட்டுவதாகவும், தனது புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து அதை தனது தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பி மிரட்டுவதாகவும் கூறி, தனக்கும் அப்புகைப்படங்களை அனுப்பி பண உதவி கோரியதாக புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் கடனாக பெறும் பணத்தை கோவையில் உள்ள தனது உறவினர் வழக்கறிஞர் ஆனந்தன் என்பவரிடம் இருந்து இரண்டு நாட்களில் பெற்றுத் தருவதாக சுஜிதா கூறியதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நான் அவரின் சூழலை உணர்ந்து வெளியூரில் இருந்ததால் இரு தினங்கள் கழித்து கடந்த 19-ம் தேதி தனது நண்பரான பாண்டியன் என்பவருடன் சென்று தனது மகளுக்கு கல்லூரிக் கட்டணம் கட்ட வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை சுஜிதாவிடம் கொடுத்துவிட்டு தனது மகளுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டிய பணம் என்பதால் இன்னும் மூன்று தினங்களில் திருப்பி அளிக்குமாறு கூறி வந்ததாகவும் தனது புகாரில் வாராகி தெரிவித்துள்ளார்.
ஆனால் மூன்று தினங்கள் கழித்தும் சுஜிதா பணத்தை திருப்பித் தராததால் அவரை தான் தொடர்புகொண்டு கேட்டபோது, தான் பணத்தை ஏற்பாடு செய்ய வெளியே வந்துள்ளதால், இரவு 11 மணிக்கு தன் வீட்டுக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாகவும், அதனடிப்படையில் கடந்த 23-ம் தேதி நான் அவருடைய வீட்டுக்கு நேரடியாகச் சென்று காலிங் பெல்லை அடித்ததாகவும், ஆனால் அப்போது யாரும் கதவைத் திறக்காததால் செல்போனில் தொடர்பு கொண்டதாகவும் ஆனால் செல்போனை அவர் எடுக்காததால் நான் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மறுநாள் 24-ம் தேதியும் இதே நிலைமை நீடித்ததாகவும், அன்று மாலை தனது வீட்டுக்கு வந்த விருகம்பாக்கம் போலீஸார் சுஜிதா கொடுத்த புகாருக்காக கைது செய்வதாகக் கூறி தன்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்றதாகவும், பின் அங்கு வைத்து தன்னை விசாரிக்காமலேயே நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா துறையினருக்கு எதிராக பல பொதுநல வழக்குகளை தொடர்ந்துள்ளதால் உள்நோக்கத்துடன் சிலர் சுஜிதாவுக்கு பின்புலமாக செயல்பட்டு தன் மீது பொய்யான குற்றச்சாட்டை உருவாக்கி வழக்கில் சிக்க வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய வாராகி, தன் மீது பொய்யான புகார் அளித்து தன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த சுஜிதா மற்றும் அவருக்கு பின்புலனாக செயல்படும் நபர்களையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.