`ஏன் சீருடை அணியவில்லை?'- மாணவியின் தலையை சுவரில் அடித்த தலைமையாசிரியை


பள்ளிக்கு சீருடை அணிந்து வராத மாணவியின் தலை முடியை பிடித்து சுவரில் மோதிய தலைமையாசிரியை மீது பெற்றோர் அளித்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் டி.டி.தோட்டம் வீனஸ் தெருவை சேர்ந்தவர் முகமது ஷானவாஸ் கான். இவர் மண்ணடி பிரகாசம் சாலையில் கரும்பு ஜீஸ் கடை நடத்தி வருகின்றார். இவரது மகள் பாத்திமா(12) பிராட்வேயில் ஹாஜி இசா அப்பா சைட் என்ற தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் முகமது ஷானவாஸுக்கு போதிய வருமானம் இல்லாததாலும் பணகஷ்டம் காரணமாக தனது மகளுக்கு சீருடை தைத்து கொடுக்க முடியாத சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மகள்பாத்திமாவுக்கு சாதாரண உடை அணிவித்து பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி பாத்திமாவை தலைமையாசிரியை ஷாயினாஸ், ஏன் சீருடை அணிந்து வரவில்லை என்று கேட்டு மாணவியின் தலைமுடியை பிடித்து சுவரில் மோதியதாக கூறப்படுகிறது. அன்று மாலை முகமது ஷானவாஸ் வழக்கம் போல் மகளை அழைத்து வர பள்ளி சென்றுள்ளார். அப்போது பள்ளியில் இருந்து பாத்திமா அழுது கொண்டே வருவதை பாரத்த ஷானவாஸ் என்ன நடந்தது என்று கேட்டபோது பாத்திமா, பள்ளியில் நடந்த சம்பவத்தை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். உடனே ஷானவாஸ் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியையிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் ஷானவாஸ் காயமடைந்த தனது மகள் பாத்திமாவை பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்பொழுது மாணவி பாத்திமா நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஷானவாஸ் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பள்ளி தலைமையாசிரியை ஷாஹினாஸ்சிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சீருடை அணியவில்லை என்பதற்காக தலைமையாசிரியை மாணவி தலைமுடியை பிடித்து சுவரில் மோதிய சம்பவம் சக பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

x