போலீஸ் கொடுத்த ரூ.1 லட்சம் லஞ்சப் பணம்: நீதிமன்றத்தில் ஒப்படைக்க வந்த விக்னேஷ் சகோதரர்கள்


விக்னேஷ் சகோதரர்கள் சூர்யா, வினோத்

சென்னை கெல்லீஸ் பகுதியில் கத்தி மற்றும் கஞ்சாவுடன் வந்ததாக கூறி தலைமைச் செயலக காலனி போலீஸார் விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரை கடந்த 18-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் கடந்த 19-ம் தேதி காவல் நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விக்னேஷின் மரணத்தை மறைக்க காவல்துறை சார்பில் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்த விக்னேஷின் சகோதரர்கள் வினோத், சூர்யா ஆகியோர் காவல் துறை தரப்பில் வழங்கப்பட்டதாக கூறப்படும் 1 லட்ச ரூபாயை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்தனர். அப்போது, நீதிபதி யஸ்வந்த் ராவ் விசாரணைக்கு ஆஜராகும் போது சாட்சிகளை சமர்பிக்குமாறு விக்னேஷ் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ்சின் வழக்கறிஞர் ப.பா.மோகன், கடந்த 18-ம் தேதி விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் கெல்லீஸ் சாலையில் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட காவலர்கள் வழிமறித்த போது, அவர்கள் குடிபோதையில் இருந்த காரணத்தினால் அவர்களை கடத்தி சென்று காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் விக்னேஷின் தலையில் தாக்கியதில் அவர் காவல் நிலையத்திலேயே இறந்துவிட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது பொய்யான வழக்கை பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். விக்னேஷின் குடும்பத்தினரிடமும், நீதிபதியிடமும் இறந்த தகவலை கூறாமல் மறைத்துள்ளனர். இதுமட்டுமின்றி குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி ஆய்வாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட காவலர்கள் செயல்படாமல் சாட்சியங்களை அழிக்க எண்ணி விக்னேஷின் உடலை எரிப்பதற்கு முயன்றுள்ளனர்.

சாட்சியங்களை மறைப்பதற்காக விக்னேஷின் குடும்பத்தாருக்கு 1 லட்சம் ரூபாயை காவல் ஆய்வாளர், பெண் காவலர் உள்ளிட்ட காவலர்கள் வழங்கி உள்ளனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இந்த வழக்கில் பின்பற்றபடவில்லை. இந்த வழக்கில் விக்னேஷின் குடும்பத்தாருக்கு மிரட்டல் இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி எழும்பூர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.

விக்னேஷ் உயிரிழந்த வழக்கு தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். அரசு வழிகாட்டுதலின் படி 12.5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக விக்னேஷின் குடும்பத்தாருக்கு அரசு அளிக்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கைது செய்யப்பட்ட சுரேஷுக்கு அரசு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

வருகிற திங்கட்கிழமை விக்னேஷின் குடும்பத்தாருக்கு சம்மன் அளிக்க இருப்பதாகவும், அப்போது விசாரணையில் போலீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படும் 1 லட்சம் ரூபாயை சமர்ப்பிக்குமாறு நீதிபதி கூறினார். இதுகுறித்த விரிவான தகவல்களை நாளை நடைபெற உள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவிப்பேன்" என்றார்.

x