சிறுமி குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் 17 வயது சிறுமி, தாயுடன் வசித்து வருகிறார். சிறுமிக்கு அண்ணன் உறவு முறை உள்ள மோகன்ராஜ் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். அவர் சிறுமி குளிப்பதை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். அதைக்காட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று சிறுமியிடம் மிரட்டியுள்ளார். அத்துடன் மோகன்ராஜின் தந்தை, தாய் மற்றும் தம்பி ஆகியோர் சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மோகன்ராஜின் தந்தை தனிக்கொடி, தாய் சாந்தி, தம்பி பாக்கியராஜ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களைத் தேடி வருகின்றனர்.