தஞ்சாவூர் அருகே இளம்பெண்ணை முந்திரிக்காட்டிற்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் அருகே தோழகிரிப்பட்டி பகுதியில் 22 வயது இளம்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி முந்திரிக் காட்டிற்கு தூக்கிச் சென்றது. அங்கு அந்த கும்பல் அப்பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அத்துடன் அங்கு அப்பெண்ணை விட்டு விட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது.
அவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதில் படுகாயமடைந்த அந்த இளம்பெண்ணை அவ்வழியாகச் சென்ற சிலர் மீட்டனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா விசாரணை நடத்தினார். இது தொடர்பாக மூவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது கூட்டு பாலியல் சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டதாக கொடியரசன், கண்ணன், சாமிநாதன், சுகுமாரன், தமிழரசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளம் பெண் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விருதுநகரைத் தொடர்ந்து தஞ்சாவூரில் இளம்பெண் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.