நள்ளிரவில் நண்பனை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த நண்பர்கள்: சென்னையில் பயங்கரம்


கொல்லப்பட்ட ரவிசந்திரன்

நண்பனை கொன்று அவரது சலடத்துடன் நண்பர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்ட சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மணலி புதுநகர் பழைய நாப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரன்(28). இவருக்கு திருமணமாகி கீர்த்தனா என்ற மனைவியும், இரண்டரை வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. நேற்று தனது மனைவியிடம் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்ற ரவிசந்திரன் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி, கணவர் ரவிசந்திரனை பல இடங்களில் தேடி அலைந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்ததால் செய்வதறியாது தவித்து வந்தார்.

இந்நிலையில் நாப்பாளையம், எம்.ஆர்.எப் காலி மைதானத்தில், கத்தி குத்துக் காயங்களுடன், தலையில் கல்லைப்போட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மணலி புதுநகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே மணலி புதுநகர் போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் காணாமல் போன ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரன் என்பது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ரவிசந்திரன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் போலீஸார் பழைய நாப்பாளையம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் மதன் குமார் (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்பேரில், வெள்ளிவாயல் சாவடி சில்வர் நகரை சேர்ந்த குட்டா (எ) ஜெயப்பிரகாஷ் (18), நாப்பாளையத்தை சேர்ந்த தனுஷ் (19), மீஞ்சூரை சேர்ந்த பரத் (19) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நண்பர்கள் சேர்ந்து மது அருத்தியபோது போதையில் ஏற்பட்ட தகராறில் ரவிசந்திரனை கத்தியால் வயிறு, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியதாகவும், அப்போது கத்தி கைப்பிடி உடைந்ததால் ஆத்திரத்தில் அருகில் இருந்த கல்லை எடுத்து ரவிசந்திரன் தலையில் போட்டு கொலை செய்து விட்டு பின்னர் அவரது சடலத்துடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் 4 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

நண்பனை கொன்று அவரது சலடத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

x