சேலம் அருகே, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவரான திமுக பிரமுகரை தந்தை, மகன் இருவரும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள கன்னியாம்பட்டியைச் சேர்ந்தவர் கந்தன் (55). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், திமுகவில் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வந்தார். நேற்று இவர் கன்னியாம்பட்டி பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அவரது உறவினர்களான மணிகண்டன்(35), அவரது சித்தப்பா சின்னபையன்(50) ஆகியோர் அரிவாளால் கந்தனை சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரளவும், அரிவாளால் வெட்டியவர்கள் டூவீலரில் தப்பிச் சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் கந்தனை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொங்கணாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த கந்தனுக்கும், கொலையாளிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் தகராறு, வழித்தட பிரச்சினை இருந்துள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.