ஆன்லைன் செயலி மூலம் மும்பையில் இருந்து இளம்பெண்ணை மாமல்லபுரம் வரவழைத்த வாலிபர்கள், அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பணம், செல்போனை பறித்துச் சென்றனர். இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆன்லைன் செயலி மூலம் மும்பையில் உள்ள அழகி ஒருவரை தொடர்பு கொண்டு, தனிமையில் இருக்க அழைத்துள்ளார். அப்போது, அந்தப் பெண் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பி மும்பையில் இருந்து மாமல்லபுரம் வந்துள்ளார் இளம்பெண். அவரை சந்தித்த ராஜேஷ், அங்கு அறை எடுத்து இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னர் தனது நண்பர்கள் தினதயாளன், விஸ்வநாதன் ஆகியோரை வரவழைத்துள்ளார் ராஜேஷ். அவர்களிடம் தனிமையில் இருக்க இளம்பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார் ராஜேஷ். இதன் பின்னர், அந்த பெண் மும்பைக்கு செல்ல முடிவு செய்ததோடு, பேசியபடி 20 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். ஆனால், அந்த வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்துப்போன இளம்பெண், தனக்கு நடந்த சோகக்கதையை குறித்து மாமல்லபுரம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், தலைமறைவாக இருந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தினதயாளன், விஸ்வநாதன் ஆகியோரை கைது செய்து, செல்போன், பணத்தை மீட்டனர். இதையடுத்து, இளம்பெண்ணை அறிவுரையுடன் எச்சரித்த காவல் துறையினர், மும்பைக்கு பத்திரமாக அனுப்பிவைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரில் இரண்டு பேரின் கால்களுக்கு மாவு கட்டுப் போடப்பட்டிருந்தது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.