‘என்னைத் திருமணம் செய்து கொள் ’- கட்டாயப்படுத்திய இளம்பெண்ணை ஆசிட் ஊற்றிக் கொன்ற வாலிபர்!


திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய இளம்பெண்ணை ஆசிட் வீசி வாலிபர் கொலை செய்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் முத்துராமலட்சுமி (35). திருமணமான இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது தாயுடன் வசித்து வந்தார். அத்துடன் ஊர், ஊராகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த செல்வம்(30) என்ற வாலிபருடன் முத்துராமலட்சுமிக்குத் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து சேர்ந்து வாழ்ந்துள்ளனர். மேலும் ஜவுளி வியாபாரமும் செய்து வந்தனர்.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு செல்வத்திடம் முத்துராமலெட்சுமி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், இதை செல்வம் ஏற்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிபோதையில் இருந்த செல்வத்திற்கும், முத்துராமலட்சுமிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த செல்வம், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை முத்துராமலட்சுமி முகத்தில் வீசி விட்டு தப்பியோடி விட்டார். தேவகோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முத்துராமலட்சுமி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து செல்வம் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x