சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் சிக்கியுள்ளார்களா என்று தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்கும் முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை. மூன்று அடுக்குமாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் ஒரு அடுக்குமாடி கீழ்தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தளத்தில் கல்லீரல் சிகிச்சைப் பிரிவும், அறுவை சிகிச்சை பொருட்களும் இருந்து வருகிறது. இங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கு சிலிண்டர்கள் ஏராளமாக இருந்ததாகவும், அவற்றில் சிலவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து அங்கு 3 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். புகை அதிகமாக வருவதால் தீ மேலும் பரவாமல் தடுக்க வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றனர். தீ கொளுந்துவிட்டு எரிவதால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஜன்னல்களை உடைத்து வீரர்கள் உள்ளே செல்ல முயற்சி மேற்கொண்டுள்ளனர். நோயாளிகள் யாராவது சிக்கி இருக்கிறார்களா என தேடி வருகின்றனர்.
இதனிடையே, தகவல் அறிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் அருகில் இருக்க வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இதனிடையே, தீ விபத்தால் 32 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குடோனில் இருந்த 10 சிலிண்டர்களில் 3 சிலிண்டர்கள் வெடித்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் ஆக்சிஜன் சிலிண்டர் கசிவா அல்லது மின் கசிவா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.