`இடையூறு செய்யாமல் போங்கள்'- அட்வைஸ் கூறிய காவலரை தாக்கிய போதை வாலிபர்கள்


நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் திருவிழாவில் பெண் சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய சம்பவத்தைப் போலவே, விருதுநகர் மாவட்டத்திலும் போலீஸ்காரர் தாக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ளது மகாராஜபுரம் கிராமம். இந்த ஊரில் உள்ள எரக்கம்மாள் கோயில் திருவிழா 2 நாட்களாக நடைபெற்றுவருகிறது. திருவிழா பாதுகாப்பு பணிக்காக வத்திராயிருப்பு காவல்நிலைய முதல்நிலை காவலர் கண்ணன் (35) உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்றிருந்தனர்.

நேற்று இரவு கோயில் பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த திருப்பதிராஜா(26), அருண்குமார்(26) ஆகியோர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி பந்தா காட்டியிருக்கிறார்கள். இதைக்கண்ட போலீஸ்காரர் கண்ணன், அவர்களை தடுத்து நிறுத்தியதுடன் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். கூட்டத்தில் தங்களை போலீஸ்காரர் நிறுத்தியதை அவமானமாகக் கருதிய அந்தப் போதை வாலிபர்கள், போலீஸ்காரர் கண்ணனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கியதாகவும் தெரிகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பதிராஜா, அருண் குமாரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

x