நிலத்தகராறு தொடர்பாக விவசாயியை மிரட்டி பணம் பெற்ற வழக்கில் முன்னாள் போலீஸ் இஸ்பெக்டருக்கு ராசிபுரம் நீதிமன்றம் இரண்டை ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
நாமக்கல் மாாவட்டம், ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் கொளஞ்சி தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி வேலு (48) என்பவருக்கும், அவரது பெரியப்பா சாமிகவுண்டர் மகன் செளந்திரராஜன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பாக செளந்திரராஜன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வெண்ணந்தூர் காவல் ஆய்வாளராக 2008-ம் ஆண்டு பணியாற்றிய சுப்பிரமணியம் (62). வேலுவை காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளாமல் வேலுவை மிரட்டி அடித்ததுடன், அவரிடம் இருந்த ரூ.5,500 ரொக்கத்தை பறித்துள்ளார்.
இது தொடர்பாக விவசாயி வேலு, ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரெகனா பேகம், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் சுப்பிரமணியத்துக்கு, இரண்டரை ஆண்டு சிறை தண்டனையும். ரூ.2,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் மேல் முறையீடு செய்யும் வகையில் அவருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் சுப்ரமணியம் வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர் என்பதும், ஓய்வு பெறும் சில நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.