பாஜகவினர் மிரட்டுவதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று மனைவிக்கு செல்போனில் வீடியோ பதிவு செய்து விட்டு ரயிலில் பாய்ந்து மென்பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளம் அருகே இரண்டு துண்டுகளாக வாலிபரின் உடல் நேற்று சிதறிக்கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீஸார், சிதைந்த உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார், தீவிர விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு பாவூர்சத்திரம் வழியாக கேரளாவுக்கு செல்லும் பாலருவி ரயிலில் சென்ற நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் பாப்பான்குளம் அருகே உள்ள ஏபி நாடனூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான சுரேஷ் என்ற சுப்பிரமணியன் என்று தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியம் சுதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் பாவூர்சத்திரம் செல்வ விநாயகபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் காரில் சென்ற சுப்பிரமணியம், பாவூர் சத்திரம் ரயில்வே கேட் அருகே காரை நிறுத்தி விட்டு பாலருவி எக்ஸ்பிரஸ் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவிக்கு செல்போனில் பேசிய வீடியோவை சுப்பிரமணியம் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், " குழந்தையை நன்றாக பார்த்துக்கொள். பாஜக ஒன்றிய அரசு வழக்கறிஞர் என சொல்லிக் கொள்ளும் ராமலிங்கம், சரவணன்ராஜ் ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து கடந்த இரண்டரை வருடங்களாக தொந்தரவு செய்து வந்ததால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், குழந்தையைத் தைரியத்துடன் வளர்க்க வேண்டும் என மனைவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பாஜகவினரால் மென்பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.