ரவுடியை கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய விவகாரத்தில் 5 பேர் கைது @ சென்னை


பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: சென்னையில், ரவுடியை கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய விவகாரம் தொடர்பாக ஐந்து பேரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தின் (அடையாறு ஆறு) அடியில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரது சடலம் மிதப்பதாக நேற்று காலை கோட்டூர்புரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்துபோன நபரின் முகம், கழுத்து, வலது கால் மணிக்கட்டு உட்பட 6 இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது. எனவே, இந்த இளைஞரை கொலை செய்து யாரோ சடலத்தை ஆற்றில் வீசியிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சென்னை கண்ணகி நகரில் உள்ள எழில் நகரைச் சேர்ந்த ஆகாஷ் என்ற டோரி ஆகாஷ் (27) என்பது தெரியவந்தது.

ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. எனவே, முன் விரோதம் காரணமாக இவரை கொலை செய்து ஆற்றில் வீசினார்களா அல்லது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்தனர். இந்தநிலையில் ஆகாஷ் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ஐந்து பேரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.