ஒரு திகில் படத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாத சம்பவங்களைக் கொண்டது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு. சசிகலாவிடம் காவல்துறையினர் இன்று விசாரணை நடத்துவதன் மூலம் பல்வேறு மர்மங்களைக் கொண்ட இவ்வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அவரின் தோழி சசிகலாவுக்கும் 900 ஏக்கரில் தேயிலைத் தோட்ட எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில் தான் கோடநாடு பங்களா உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருடத்தில் 4 மாதங்கள் கோடநாடு பங்களாவில் தங்கி அரசு பணிகளைக் கவனித்து வந்தார். இதனால் இந்த பங்களாவில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் ஜெயலலிதாவின் சொத்து ஆவணங்கள் மற்றும் வைர, தங்க நகைகளும் அதிகளவில் அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின், கடந்த 2017 ஏப்ரல் 24-ம் தேதி நள்ளிரவில் கோடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்த கும்பல், காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது. மற்றொரு காவலாளியான நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ண தாப்பாவை கொடூரமாகத் தாக்கியது. அதன் பிறகு பங்களாவுக்குள் இருந்த பொருள்களைத் திருடிச் சென்றது. இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை நீலகிரி மாவட்ட போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான கனகராஜ், சேலம் மாவட்டம், ஆத்தூரில் சாலை விபத்தில் மரணமடைந்தார். இவர் சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சமுத்திரம் சித்திரபாளையம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2008-ம் ஆண்டு இறுதியில் போயஸ் கார்டனில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். ஜெயலலிதா கோடநாடு செல்லும் போதெல்லாம், கனகராஜ் தான் கார் ஓட்டிச் சென்றுள்ளார். அத்துடன் கோடநாடு பங்களா பராமரிப்பு பணியையும் அவர் செய்துள்ளார். இதன் பின் சில ஆண்டுகளில் அவர் போயஸ் கார்டனில் இருந்த வெளியேற்றப்பட்டுள்ளார்.
அவர் சாலை விபத்தில் மரணமடைந்த 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த வழக்கில் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்ட சயானுக்குச் சொந்தமான கார் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இதில் சயானின் மனைவியும், மகனும் உயிரிழந்தனர். இதில் சயான் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இதேபோன்று கோடநாடு பங்களாவில் கணினி ஆப்ரேட்டராக இருந்த இருந்த தினேஷ்குமார் அதே ஆண்டில் தற்கொலை செய்தார். கொள்ளை நடந்ததற்கு பிறகு அடுத்தடுத்து ஐந்து தொடர் மரணங்கள் கோடநாடு வழக்கை பேசுபொருளாக மாற்றியது.
பல ஆண்டுகளாக நடந்து வந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மாற்றத்துக்கு பின்பு தீவிரமடைந்துள்ளது. ஆனால், இந்த வழக்கில் அதிமுகவினர் பெயர்கள் சேர்க்கப்படலாம் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரைச் சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனது பெயரோடு அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயரையும் சேர்க்க முயற்சி நடக்கிறது. பொய்யான வழக்குகளை கொண்டுவந்து அச்சுறுத்தும் நடவடிக்கைளை திமுக மேற்கொள்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
இதற்குச் சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘’கோடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் ஆட்சி கண்டிப்பாக நடக்கும். இந்த வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. அதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி கோடநாடு வழக்கு குறித்து விசாரிக்கப்படுகிறது. உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். அதிமுகவினர் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல செயல்படுகின்றனர்’’ என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு வேகமெடுத்த இவ்வழக்கில் தனிப்படை போலீஸார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரும், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன், கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, அவரது மகன், உறவினர் மகன், நேர்முக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இவ்வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்ட நபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கோடநாடு வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற சசிகலாவிடம் இன்று விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஏனெனில், எஸ்டேட் வளாகத்துக்குள் உள்ள பொருட்கள் குறித்து ஜெயலலிதா, சசிகலா மற்றும் சிலருக்கு மட்டுமே தெரியும். எனவே, கோடநாடு எஸ்டேட் வளாகத்துக்குள் என்னென்ன பொருட்கள் இருந்தன. அதிலிருந்து கொள்ளைச் சம்பவத்துக்கு பிறகு காணாமல் போன பொருட்கள் என்னென்ன என்பது போன்றவை குறித்து சசிகலாவிடம் விசாரித்து தகவல்களைப் பெற போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சசிகலாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளனர். கோவையில் விசாரணை மேற்கொண்டு வரும் நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார் இன்று அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
இதுவரை கோடநாடு வழக்கு சம்பந்தமாக விசாரிக்கப்பட்ட 217 பேரின் வாக்குமூலங்களைக் கொண்டும், கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளையின் நோக்கம் குறித்தும் நடக்கும் இந்த விசாரணையில் மர்மமுடிச்சுகள் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவ்வழக்கில் பல அதிமுக முக்கிய பிரமுகர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக அதிமுகவில் உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என்ற செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவிற்கு அடுத்து இந்த விசாரணை வளையத்திற்குள் சிக்கப் போவது யார்?