சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் இன்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அறை தரைமட்டமானதில் இளைஞர் ஒருவர் சிக்கி உடல் கருகி பலியானார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது மாரனேரி பர்மாகாலனி. இங்கு தங்கபாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் இன்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில், பட்டாசு தயாரிக்கப்பட்ட ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது.
அப்போது அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த சரவணன் மகன் அரவிந்த்(22) இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அத்துடன் கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கி கருகிய நிலையில் கிடந்த அரவிந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்த் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து அரவிந்த் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.