நெல்லையில் நிலத் தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை


திருநெல்வேலி மாவட்டம், நாஞ்சான்குளம் பகுதியில் நிலத்தகராறில் பெண் உள்பட மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே உள்ளது நாஞ்சான்குளம். இங்கு நிலம் தொடர்பாக இருதரப்பினருக்கு இடையில் நீண்டகாலமாகப் பிரச்சினை இருந்துவந்தது. இருதரப்புமே அந்த நிலத்தைச் சொந்தம் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இன்று மாலை பிரச்சினைக்குரிய நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க ஒருதரப்பினர் வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஆழ்துளைக் கிணறு அமைக்க வந்தவர்கள், எதிர்த்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் வசந்தா(40), ஜேசுராஜ்(73), மாயராஜ்(56) ஆகிய மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மூவருமே உறவினர்கள் ஆவார்கள். வசந்தா பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பதிவு எழுத்தராகப் பணிசெய்துவந்தவர்.

இந்தக் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து நாஞ்சான்குளம் பகுதியைப் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதுதொடர்பாக மானூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x