சிறுகச் சிறுகத் திருட்டு: நூதன முறையில் 72 பவுன் நகை கொள்ளை!


மாதிரிப் படம்

சிறுக சிறுகச் சேமிப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாகர்கோவிலில் ஒரு வீட்டில் வேலை செய்த பணியாளர்களே சிறுகச் சிறுகக் கொள்ளையடித்து 72 பவுன் நகைகளை வாரிச் சுருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையைச் சேர்ந்தவர் ஆனந்தன்(70). இவர் சொந்தமாக உணவகம் ஒன்றினை நடத்திவருகிறார். சித்திரை 1 அன்று, தங்கள் வீட்டில் இருக்கும் பணம், நகை ஆகியவற்றை கடவுளின் முன்பு வைத்து வழிபடும் வழக்கம் குமரி மாவட்டத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் இருக்கிறது. அப்படி ஆனந்தன் சாமி படத்தின் முன்பு நகையை வைக்க தன் வீட்டு பீரோவில் இருக்கும் லாக்கரைத் திறந்து பார்த்தார். அப்போதுதான் வீட்டில் இருந்த 72 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆனந்தன் நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். கைரேகை நிபுணர்களும் வந்து வீட்டுக்குள் சிக்கிய தடயங்களின் அடிப்படையில் சோதனை நடந்தது.

இதனிடையே போலீஸாரின் சந்தேகப் பார்வை ஆனந்தன் வீட்டில் வேலை செய்யும் இரு பெண்களின் மீது திரும்பியது. போலீஸார் நடத்திய தொடர் விசாரணயில் இரு பெண்களும் நகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தங்களுக்குள் சரிசமமாகப் பிரித்துக்கொண்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

x