சென்னை: நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3 பவுன் தங்கச் செயினைத் திருடிச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் விஷால். இவர் நூர் வீராசாமி தெருவில் அடகுக் கடை மற்றும் நகைக்கடை நடத்தி வகிறார். இவரது கடைக்கு நேற்று மாலை 15 வயது சிறுவனுடன் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆட்டோவில் வந்து இறங்கினார்.
சிறுவனுடன் நகை கடைக்குள் வந்த அந்தப் பெண், 3 சவரன் செயின் வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து விஷால் 3 சவரன் எடையுள்ள 6 செயின்களை எடுத்துக் காட்டியுள்ளார். ஒவ்வொன்றாக பார்த்த அந்த பெண், எதுவும் பிடிக்கவில்லை வேறு மாடல் காட்டுங்கள் எனக் கூறியுள்ளார். இதையடுத்து விஷால், ”கொஞ்சம் பொறுங்கள், மற்றொரு கடையில் இருந்து வேறு மாடல்களை வரவழைத்துத் தருகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், அந்தப் பெண் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். விஷால் உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து அந்த பெண்ணிற்கு கொடுத்துள்ளார். தண்ணீரை குடித்த அந்தப் பெண், “பிறகு வருகிறேன்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக ஆட்டோவில் ஏறி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் போன பிறகு விஷால் நகைகளை சரிபார்த்த போது, 6 செயின்களில் ஒன்று கவரிங் என தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது தண்ணீர் கொண்டு வருவதற்காக விஷால் உள்ளே சென்ற போது, அந்தப் பெண் ஆறு செயின்களில் ஒரு செயினை திருடிக் கொண்டு, அதற்குப் பதிலாக தான் அணிந்திருந்த கவரிங் செயினை, கழற்றி வைத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விஷால் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளின் படி விசாரணை நடத்தி வருகின்றனர்.