வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: விருதுநகரில் மேலும் மூவர் கைது


விருதுநகர்: நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரைப் பள்ளத்தைச் சேர்ந்தர் தோப்படி முத்து (36). இவருக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி விருதுநகர் வேலுச்சமி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (54) ரூ.8 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பல மாதங்களாகியும் இவர் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தை திரும்பிக் கேட்டபோது கிருஷ்ணசாமி பணம் கொடுக்க மறுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதையறிந்த தோப்படி முத்து இது குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார்.

அதன்பேரில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக கிருஷ்ணசாமி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது
மனைவி சசி ஆகியோரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் கடந்த மார்ச் 22ம் தேதி இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிருஷ்ணசாமி விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழு நோய் பிரிவு மேற்பார்வையாளராகவும், இவரது மனைவ சசி, பாலவ நத்தத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தம்பதி இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். அப்போது, இந்த வழக்கை டிஎஸ்பி தலைமையில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்திரி தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கில், தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த செய்யது இப்ராகிம் (55), அப்துல் காதர் (37), விஜய லட்சுமி (36) ஆகியரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். இவர்களில், செய்யது இப்ராகிம் என்பவர் தன்னை ஓய்வு பெற்ற நீதிபதி என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததும், விஜயலட்சுமி அரசு பணி ஆணை போன்று போலியான ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.