20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள்... 3 பேரின் உயிரை பறித்தது பைக்


கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் வேனும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூன்று பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மைலாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மகன் முத்துசாமி. இவரும், இவரது நண்பர்கள் இருவரும் ஒரே டூவிலரில் சுசீந்திரம் புறவழிச்சாலையில் இன்று மாலை சென்று கொண்டிருந்தனர். அப்போது கன்னியாகுமரியில் இருந்து, நாகர்கோவிலை நோக்கி அதே புறவழிச்சாலையில் வேன் ஒன்றுவந்தது. டூவீலரில் வந்த மூவரும், அவர்களுக்கு முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த வேன் அவர்கள் மீது மோதியது.

டூவிலரில் வந்தவர்கள் மித மிஞ்சிய வேகத்தில் வந்ததால் வேனில் மோதியதும் 20 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டனர். அதில் ஒருவர் மேலே வரை உயரத்தில் சென்று வேனின் மீதே விழுந்தார். இதனால் வேனின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. முத்துசாமியும், அவரது நண்பர்கள் இருவரும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

விபத்துக்குறித்து தகவல் தெரிந்ததும் சுசீந்திரம் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் முத்துசாமியைத் தவிர அவரோடு இருந்த மற்ற இருவர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x