சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரால் பெட்ரோல் குண்டு வீசி பாஜக பிரமுகர் கார் எரிக்கப்பட்டதாக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டது. ஆனால், சிசிடிவி காட்சியால் சிக்கிய பாஜக பிரமுகர், தனது மனைவி டார்ச்சரால் காருக்கு தீ வைத்தாக காவல்துறையில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் பாஜக மத்திய மாவட்ட செயலாளராக உள்ளார். இவருடைய கார் நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து எரிந்தது. பாஜக நிர்வாகியின் காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததாக தகவல் பரவியது.
ஏப்ரல் 14ம் தேதி சென்னை கோயம்பேடு பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி பாஜக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதன் பின்னணியில் தான், சதீஸ்குமாரின் கார் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது என்று சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கோயம்பேடு சரக உதவி ஆணையாளர் ரமேஷ் பாபு விசாரணைக்கு உத்தரவிட்டார். மதுரவாயல் உதவி ஆய்வாளர் சுதாகர், கார் எரிந்த இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அவர் ஆய்வு செய்தார். அதில், சதீஸ்குமாரே தன்னுடைய காருக்கு தீ வைத்து எரித்த காட்சி இருந்ததைப் பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சதீஸ்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நகை வாங்கித்தரச்சொல்லி மனைவி கொடுத்த மனஉளைச்சல் காரணமாக காருக்கு தீ வைத்ததாக அவர் கூறினார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர், ஜாமீனில் அவரை விடுவித்தனர். இந்த சம்பவம் மதுரவாயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.