கேரள சிறையில் இருந்த பாபுவை, தமிழகத்தில் செய்த குற்றத்திற்காக தமிழக போலீஸார் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது போலீஸாரைத் தாக்கிவிட்டு பாபு தப்பி ஓடியதால் தமிழகம், கேரளம் என இருமாநில போலீஸாரும் தேடிவந்த பாபுவை இன்று குமரி மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இதில் கொலை வழக்கு ஒன்றில் கைதான பாபு திருவனந்தபுரம் சிறையில் இருந்துவந்தார். இந்நிலையில் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பாபு மீதான வழக்கில் அவரை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டி இருந்தது. இதற்காக, மார்த்தாண்டம் போலீஸார், கேரள சிறைத்துறைக்கு மனுசெய்து குற்றவாளியான பாபுவை அழைத்து வந்தனர். குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த போதே போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார் பாபு.
அவர் கேரளம் சென்றாரா? அல்லது தமிழகப் பகுதிக்கு சென்றாரா? என்பது உறுதியாகத் தெரியாமல் இரு மாநில போலீஸாருமே குழம்பிவந்தனர். இதில், கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை சார்பில் பாபுவைப் பிடிக்க இருதனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான போலீஸாருக்கு பாபு நாகர்கோவிலில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரை ஒரு வீட்டில் வைத்து கைது செய்தனர். 5 நாள்களாக இருமாநில போலீஸாரையும் அலைய விட்ட பாபுவை குமரிமாவட்ட போலீஸார், கேரள போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.