`பணத்துக்காக மாணவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தேன்'- டிரம்ஸ் கலைஞர் வாக்குமூலம்


மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வைத்திருந்ததாகவும், மாணவி வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மூலம் பலமுறை தனக்கு தேவைப்படும் போதெல்லாம் பணத்தை பெற்றுக் கொண்டதாகவும் காவல் துறையினரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார் கைதான வாலிபர்.

சென்னை அசோக் நகரை சேர்ந்த பிளஸ்2 மாணவியின் பெற்றோர் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து, லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதாக வாலிபர் ஒருவர் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் (20) என்ற டிரம்ஸ் இசை கலைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஞானப்பிரகாசம், இசைக் கச்சேரிகளில் டிரம்ஸ் வாசித்து வருவதும், கச்சேரிகள் இல்லாத நாட்களில் தனியார் பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

மேலும், பள்ளி மாணவி 8-வது படிக்கும்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், நாளடைவில் மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை கூறி பலமுறை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து அதை மாணவிக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்ட ஞானப்பிரகாசம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், மாணவி வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மூலம் பலமுறை தனக்கு தேவைப்படும் போதெல்லாம் பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், ஒரு கட்டத்தில் தனக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டதால் அதை மாணவியிடம் கேட்டபோது, அவர் கொடுக்க மறுத்ததாகவும், அதனால் அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவைக் காட்டி மிரட்டி பணம் கேட்டதாகவும் வாக்குமூலத்தில் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

வீடியோவை காட்டி மிரட்டியதில் மாணவி பயந்துபோய் தான் கேட்ட பணத்தை பெற்றோருக்கு தெரியாமல் எடுத்து வந்து தன்னிடம் கொடுத்ததாகவும் அதிகமான தொகை காணாமல் போனதால் தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டதாகவும் ஞானப்பிரகாசம் கூறியுள்ளார். ஞானப்பிரகாசம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஞானப்பிரகாசத்திடம் பணமாகவோ, பொருளாகவோ எதுவுமில்லை என்பதால் மாணவியிடம் பெற்ற லட்சக்கணக்கான பணத்தை அவர் என்ன செய்தார் என்பது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x