சென்னையில் வழிக்கேட்ட கேட்ட கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியை காவலர் ஒருவர் பிரம்பால் அடித்து உதைத்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள், போதை காவலரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்(28), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த்(36) ஆகியோர் கண்பார்வையற்ற மாற்றுதிறனாளிகள். இவர்கள் சென்னையில் ஊதுவர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். நேற்று இருவரும் திருவல்லிக்கேணி சி.என்.கே சாலை பெல்ஸ் ரோடு சந்திப்பு அருகே நடந்து வந்தனர். அப்போது, அங்கே நின்றிருந்த நபர் ஒருவரிடம் ஓவிஎம் தெரு எங்கே உள்ளது? என கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர் என்னிடமே வழி கேட்கிறாயா எனக்கூறி பார்வையற்றோர் கையில் இருந்த பிரம்பை பறித்து தாக்கியதுடன் அவர்கள் வைத்திருந்த பொருட்களை பிடுங்கு வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மது போதையில் இருந்த நபரிடம் ஏன் அவர்களை அடிக்கிறாய்? எனக்கேட்ட போது, நான் போலீஸ், என்னையே கேள்வி கேட்கிறீயா என கூறி பொதுமக்களை தாக்க முயன்றுள்ளார்.. பின்னர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த போதை ஆசாமியை அடித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை அடித்து உதைத்த நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தண்டையார்ப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் தினேஷ்குமார்(39) என்றும் தற்பொழுது அவர் மருத்துவ விடுப்பில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் தினேஷ்குமார் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தினேஷ் குமாரிடம் போலீஸார் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழிகேட்டு சென்ற கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை காவலர் ஒருவர் மதுபோதையில் அடித்து உதைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.