சிறைக்குள் ரவுடிக்கு ‘பிரியாணி’, ‘குவாட்டர்’ சப்ளை !


சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சிறையில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் உள்ளனர். சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறைக் கண்காணிப்பாளர் முதல் வார்டன்கள் வரை சகல வசதிகளையும் செய்து தந்துள்ளனர். சிறையில் இருக்கும் ரவுடிக்கு சிறைக்கு வெளியில் இருந்து நாள்தோறும் பிரியாணி, சில்லி சிக்கன், ‘குவாட்டர்’ மற்றும் மிக்சிங்கிற்கு தேவையான ‘வாட்டர்’ என சகலமும் சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது.

இதுபோல் சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரை ‘வெயிட்’டாக கவனிக்கும் பிற சிறைவாசிகளுக்கும் இதுபோன்ற வசதிகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்த தகவல் சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளரான எஸ்.பி கிருஷ்ணகுமாருக்கு எட்டியது. அதிரடியாக களம் இறங்கிய எஸ்.பி கிருஷ்ணகுமார் ஆத்தூர் சிறையில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

அப்போது சம்பந்தப்பட்ட ரவுடிக்கு கயிறு கட்டி பிரியாணி உள்ளிட்ட சகல வசதிகள் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறை கண்காணிப்பாளரான எஸ்.பி சசிக்குமாரை திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறைக்கு எஸ்.பி கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுபோல் சீப்- ஹெட்வார்டன்கள் சுந்திரராஜன், ராமலிங்கம், ஏட்டுகள் அசோக்குமார், செந்தில்குமார், வார்டன்கள் ஜெயசீலன், மாரியப்பன் ஆகிய 6 பேரும் வேலூர், கடலூர் சிறைகளுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன் எஸ்.பி கிருஷ்ணகுமார் ஆத்தூர் சிறையில் ஆய்வு செய்தபோது சிறையில் உள்ள தனி அறை ஒன்றில் கூடுதலாக அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் இருந்துள்ளது.

இதைப் பார்த்த எஸ்.பி கிருஷ்ணகுமார், சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரை எச்சரித்துச் சென்றார். ஆனால், எந்த பயமும் இல்லாமல் சிறைவாசிகளுக்கு தொடர்ந்து வசதி செய்து கொடுத்து வந்ததாலேயே சிறைக்காணிப்பாளர் உள்பட 7 பேரும் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர் என சிறைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

x