பாலக்காட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி கொலை!


சுபைர்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சுபைர் (44) இன்று படுகொலை செய்யப்பட்டார். அவரது தந்தையின் கண் எதிரே நடந்த இந்தச் சம்பவத்தால் பாலக்காடு மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

கடந்த நவம்பரில் அதே இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதனால் இது பழிக்குப் பழியாக நடந்த சம்பவமாக இருக்கலாம் எனச் சொல்லி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலக்காடு மாவட்டத்தின் எலப்புள்ளி பகுதியைச் சேர்ந்த சுபைர் இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தனது தந்தை அபுபக்கருடன் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த கார் ஒன்று மோதியது. அவர் இறங்கி டூவீலரின் சேதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த நான்குபேர் கொண்ட கும்பல் சுபைரை சரமாரியாக வெட்டியது. சினிமா பாணியில் நடந்த இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் பரவியது. அக்கம், பக்கத்தினர் சுபைரை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் இதே தேதியில் சஞ்சித் என்ற ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அதே இடத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியுடன் அவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது இதேபோல் பின்னால் வந்த ஒருகார் மோதியது. அதனிடையில் மற்றொரு காரில் வந்த கும்பல் சஞ்சித்தை படுகொலை செய்தது. அதே இடத்தில் அதே தேதியில் இந்தக் கொலையும் நடந்துள்ளது. சஞ்சித் கொலை வழக்கில் எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளைச் சேர்ந்த 10 பேர் மீது காவல்துறை அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவர்களில் சிலர் சிறையிலும் உள்ளனர். இந்த நிலையில், சஞ்சித் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் துரிதப்படுத்தி வருகிறார்கள்.

x