விருதுநகர் பெண் பலாத்காரம்: 4 பேருக்கு குண்டாஸ்


விருதுநகரில் இளம்பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விருதுநகரில் 22 வயது இளம் பெண்ணை வீடியோ எடுத்துமிரட்டி ஒரு கும்பல் 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இச்சம்பவத்தில் திமுக பிரமுகர் உள்பட பலர் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. விருதுநகரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "விருதுநகரில் இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் கண்காணிக்கப்படும். பொள்ளாச்சி சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல் அல்லாமல் விருதுநகர் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது" என்று அவர் வலியுறுத்தி பேசினார்.

இதையடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் உள்பட 8 பேர் மீது சிபிசிஐடி போலீஸார், 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட நான்கு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜீனத் அகமது ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் நான்கு பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

x