நெடுஞ்சாலைத்துறை மோசடி விவரங்களைத் திரட்டும் தமிழக அரசு !


நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல் முறைகேடு குறித்து காமதேனுவில் நேற்று செய்தி வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து கரூர், ஈரோடு போல வேலை செய்யாமலே பணமோசடி தமிழகத்தில் எங்காவது நடைபெற்றுள்ளதா என்ற விவரத்தைத் தமிழக அரசுக்கு அனுப்பச் சொல்லி நெடுஞ்சாலைத்துறையில் உள்ள 9 தலைமைப் பொறியாளர்களுக்கும் அரசு தரப்பில் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின், புதிதாக சாலைகள் அமைக்கும் பணியோ அல்லது சீரமைக்கும் பணியோ நடைபெறாமலே அதிகாரிகள் உதவியுடன் ரூ.10 கோடி ரூபாய் அளவிற்கு பணம் எடுக்கப்பட்டது. இதில் 3 கோடி ரூபாய் அளவு ஊழல் நடந்ததாக மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புகார் அளித்தார். இதையடுத்து கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், கிழக்குப் பிரிவு இளநிலை பொறியாளர் பூபாலசிங், கோட்ட கணக்கர் பெரியசாமி ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதே போல நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்திலும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஈரோடு நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்ட பொறியாளர் நித்திலன், கரூர் உதவி கோட்டப் பொறியாளர் முகமது ரபீக், கரூர் உதவி பொறியாளர் தீபிகா, ஈரோடு கோட்டக்கணக்கர் சத்யா ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக காமதேனு மின்னிதழில் நேற்று முழுமையாக செய்தி வெளியானது.

குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்த பின் கரூர், ஈரோட்டில் நடைபெற்றதைப் போல சாலை போடாமலே பணம் சுருட்டல் முறைகேடு நடைபெற்றதா என மாநிலம் முழுவதும் அரசு ஆய்வு நடத்த வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக கரூர், ஈரோடு போல பணி நடைபெறாமலே பணப்பட்டுவாடா நடந்திருந்தால் அதுகுறித்த விபரங்கள் வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால், பணப்பட்டுவாடா நடைபெறவில்லையென்ற விவரத்தை எழுதித்தர வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறையில் உள்ள 9 தலைமை பொறியாளர்களும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இத்தகவல்களை விரைவில் திரட்டி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமாருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில், ஏப்ரல்18-ம் தேதி நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், கோட்டப்பொறியாளர்கள் கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் விசாரித்த போது," கரூர், ஈரோடு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்குள் நடந்த நெடுஞ்சாலைத்துறைப் பணிகளை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், துறை அதிகாரிகள் ஆய்வை முழுமையாக செய்வார்களா என்ற கேள்வியும் உள்ளது. ஏனெனில், ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து முறைகேட்டில் அவர்களும் சேர்ந்து தான் ஈடுபட்டுள்ளனர். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் மூலம் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அப்படி செய்தால் தான், இந்த முறைகேட்டில் பின்னணியில் உள்ள அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் சிக்குவார்கள்" என்றனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல் முறைகேடு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் முதல்கட்டமாக நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் தலைமைச்செயலாளர்கள் இடமாறுதல் செய்ய வாய்ப்பு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

x