வடமாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?- பகீர் தகவல்


மத்திய அரசுப்பணியில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை வழங்கியது போல் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது தேர்வுத்துறையின் ஆய்வில் தெரியவந்ததை தேர்வுகள் இயக்ககம் உறுதி செய்துள்ளது.

மத்திய, மாநில அரசுப் பணியில் சேரும் நபர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிவதற்கு அந்தந்த தேர்வுத்துறைக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். தபால் துறை சார்பில், கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ் தெரிந்த, தமிழ் படித்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், இதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு அஞ்சல் துறையில் பணிக்கு சேர்ந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டப்போது 200 பேரின் சான்றிதழ் போலி என தெரியவந்தது. அதேபோல் மத்திய அரசின் நிறுவனங்களில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர். சிபிசிஎல், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில் பணியில் சேர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் பணிக்கு சேர்ந்தவர்களில் 20 பேர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்களில் 2 பேரை கைது செய்த கர்நாடக காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறையில் விசாரணை செய்து அறிக்கை பெற்றுச் சென்றுள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிக்கு சேர்ந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டப் போது 2 பேர் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததும் தெரியவந்துள்ளது. போலி மதிப்பெண்கள் அளித்து பணியில் சேர்ந்தவர்கள் மீது காவல் துறையின் மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யவும் அந்தத்துறைகளுக்கு அரசுத் தேர்வுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

சான்றிதழில் மாநில மாெழியை முதல் மாெழியாக பதிவு செய்தும் அரசுத் தேர்வுத் துறையின் பெயர் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்யும் போது அவர்களின் விவரங்கள் அடங்கிய தகவல் தெரியவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு தவறுகள் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் மதிப்பெண் சான்றிதழ் போலியாக அச்சிடப்பட்டுள்ளது.

போலி மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு வட மாநில இளைஞர்களுக்கு வழங்கியவர்களை கண்டுபிடிக்கும் பணியில் கர்நாடக காவல்துறை தீவிரம் காட்டி வரும் தகவலையும் அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

x