உதகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறப்பு காவல் படை பிரிவு போலீஸார் கைது


உதகை: உதகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறப்பு காவல் படை பிரிவு போலீஸார் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வெல்வார்பேட்டை முத்தன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சவுந்தர் ராஜன் (29). இவர் கடந்த 2020-ம் ஆண்டு தமிழக சிறப்பு காவல் படை போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். 14-வது பழனி பட்டாலியன் பிரிவில் உள்ள இவர், நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு உதகை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனா பிரியா, மகளிர் காவல் ஆய்வாளர் முத்து மாரியம்மாள் தலைமையிலான போலீஸார் உதகை பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிந்த சவுந்தர ராஜனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

அப்போது அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் விற்பனைக்காக 200 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் நீலகிரிக்கு பணிக்கு வந்த கடந்த 4 மாதங்களாக தேனியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சவுந்தர ராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சிறப்பு காவல் படை எஸ்பி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு சேரம்பாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்த உடையார் செல்வம் (27), எருமாடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த அமரன் (24), உதகை நகர மத்திய போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த விவேக் ஆகிய 3 பேர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.