உத்தபுரத்தில் மீண்டும் சாதிய பதற்றம்: போலீஸ் குவிப்பு


கோப்புப்படம்

தீண்டாமைச் சுவர் பிரச்சினையால் மோதல் ஏற்பட்ட உத்தபுரம் கிராமத்தில், தற்போது மீண்டும் சாதி ரீதியான பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கும், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்துவந்தது. இதன் காரணமாக பட்டியலினத்தினர் தங்கள் தெருவுக்குள் நுழையாத வகையில் மற்றொரு சாதியினர் 30 மீட்டர் நீளத்துக்கு சுவர் கட்டியிருந்தனர். இதனைத் தீண்டாமைச் சுவர் என்று கூறி மற்றொரு தரப்பினர் போராடியதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும் சமசர கூட்டம் நடத்தி அந்த சுவரை மாவட்ட நிர்வாகம் அகற்றியது. தொடர் பேச்சுவார்த்தையின் மூலம் அந்த ஊரில் அமைதியும் நிலைநாட்டப்பட்டது.

இந்தச் சூழலில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது மறைந்த தலைவர் ஒருவரின் படத்துடன் கூடிய பெயர்ப் பலகையை ஊர்ச்சாலையில் வைத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எழுமலை போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தனர். இதற்கிடையே நேற்றிரவு அந்த பெயர்ப் பலகையில் யாரோ மர்ம நபர் சாணியை கரைத்து ஊற்றியதாகக் கூறப்படுகிறது.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த பட்டியலின மக்கள் இன்று காலையில் ஒன்று திரண்டனர். அதேபோல எதிர்த்தரப்பினரும் தங்கள் பகுதியில் திரண்டதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ஊரில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உசிலம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் நல்லு உள்ளிட்ட அதிகாரிகளும் அங்கு முகாமிட்டு சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

x