போலி கையெழுத்து போட்டு ரூ.91 லட்சம் கையாடல்!


கோப்புப்படம்

போலி கையெழுத்துப் போட்டு 91 லட்சம் ரூபாயை முறைகேடாகத் திருடிய பேரூராட்சியின் தற்காலிக ஊழியரை இன்று போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ளது புவனகிரி தேர்வுநிலைப் பேரூராட்சி. இங்கு புவனகிரி அருகில் உள்ள கீழமணக்குடி பகுதியைச் சேர்ந்த வீரமணி(29) என்பவர் தற்காலிகப் பணியாளராக கணினிப் பிரிவில் வேலைசெய்து வருகிறார். இங்கு அப்துல் சாதிக் பாட்ஷா என்பவர் செயல் அலுவலராகப் பணியாற்றிய காலத்தில் வீரமணி அவரது கையெழுத்தைப் போலியாகப் போட்டு, பேரூராட்சிக் கணக்கில் இருந்த 91 லட்சம் ரூபாயை பல்வேறு தவணையாக தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளார்.

இது 2021-2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தணிக்கையின் போது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தற்போது புவனகிரி பேரூராட்சியில் பணிபுரிந்துவரும் செயல் அலுவலர் அருள்குமார், முறைகேட்டில் ஈடுபட்ட வீரமணி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து இன்று பேரூராட்சியின் தற்காலிக ஊழியர் வீரமணியைக் கைதுசெய்த போலீஸார், இந்தக் குற்றத்தில் அவருக்குப் பின்னால் வேறுயாரும் உடந்தையாக இருக்கிறார்களா என்றும் விசாரித்து வருகின்றனர்.

x