நெல்லை மாவட்டத்தின் தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் பாறைகளை உடைத்து பொடியாக்கும் எம் சாண்ட் குவாரி ஒன்று செயல்பட்டுவந்தது. அந்தக் குவாரியை ஒட்டி வண்டலோடை எனும் ஆறு ஓடுகிறது. இந்தக் குவாரியில் பாறைகளை உடைப்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சிலர் அதைத் தவறாகப் பயன்படுத்தி ஆற்று மணலைக் கடத்தி நீண்டகாலமாகக் கேரளாவுக்கு அனுப்பிவைத்துள்ளனர். அந்த பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் கடந்த 2019-ல், இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் குவாரியை ஆய்வுசெய்ய உத்தரவிட்டது.
சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீக் தயாள் இதுகுறித்து ஆய்வுசெய்து, வண்டலோடையில் இருந்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்றுமணல் திருடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். முறைகேட்டில் ஈடுபட்ட குவாரிக்கு 9.5 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய தெற்குக் கல்லிடைக் குறிச்சி விஏஓ, கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய அதிகாரிகள் ஆகியோரையும் இடமாற்றம் செய்தனர். 2019 காலக்கட்டத்தில் நெல்லையில் கனிமவளத் துறை உதவி இயக்குநராக இருந்த சபீதாவின் கணவர் சமீருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து அவரையும் கைது செய்திருந்தனர். இந்த வழக்கு சிபிசிஜடிக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே கனிமவளத் துறை உதவி இயக்குநர் சபிதா தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார். இந்நிலையில் இவ்வழக்குத் தொடர்பாக அவரை விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் சபிதாவுக்கும் மணல் கடத்தலில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. சபிதாவிடம் நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்த விசாரணை, இன்று காலையிலும் நடந்தது. விசாரணையின் முடிவில் அவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே இந்த வழக்கில் குவாரி உரிமையாளர் மனுவேல் ஜார்ஜ், 4 பாதிரியார்கள், திமுக நிர்வாகி குமார் எனப் பலர் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.