கரூர் அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்த வெளிமாநில தொழிலாளி - போலீஸ் விசாரணை


கரூர்: வாங்கல் அருகே காவிரி பரிசல் துறையில் உடலில் காயங்களுடன் அடையாளம் தெரியாத வெளிமாநில தொழிலாளி சடலமாக கிடந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் கடந்த சில நாட்களாக சந்தேகத்திற்கு இடமான முறையில் 35 வயது மதிக்கத்தக்க வெளிமாநில தொழிலாளி சுற்றித் திரிந்துள்ளார். சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் (ஜூன் 22ம் தேதி) மாலை 4.30 மணிக்கு அப்பகுதியில் சாவியுடன் நின்றிருந்த ஈவிஆர் தெருவைச் வினோத்குமாரின் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார்.

மேலும் இரு நாட்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு சாவியுடன் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது அமர்ந்திருந்துள்ளார். இதனை கண்ட வாகன உரிமையாளர் அவரை திட்டியதை அடுத்து அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் வினோத்குமார் அவரது நண்பர்களுடன அவரை இரு சக்கர வாகனங்களில் துரத்திச் சென்று அவரை விரட்டி சென்று பிடித்து குச்சியால் தாக்கியுள்ளனர்.

அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் வாங்கல் பரிசல் துறை பகுதியில் உடலில் காயங்களுடன் வெளிமாநில தொழிலாளி சடலமாக நேற்று (ஜூன் 23ம் தேதி) கிடந்துள்ளார்.இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவல் பேரில் வாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பூர்ணிமா வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சடலதை மீட்டனர்.

வெளிமாநில தொழிலாளியை தாக்கிய வீடியோ அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (30), கதிர்வேல் (28), பாலாஜி, கருவாடு என்கிற முத்து, கரண்ராஜ் ஆகிய 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து வினோத்குமார், கதிரவேல் ஆகிய கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் நேற்று அடைத்தனர்.

தலைமறைவான மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர். இதில் வினோத்குமார் மீது வாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று உள்ளது. மேலும் உயிரிழந்தவர் யாரெனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x