8 வயது நண்பனைக் கொன்ற 13 வயது சிறுவன்!


டெல்லியில் 13 வயது சிறுவன் ஒருவன், தன்னுடன் சண்டை போட்ட 8 வயது நண்பனை, அருகில் உள்ள காட்டில் வைத்து கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியின் ரோஹிணி பகுதியில் உள்ள சோஹடீ கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. கட்டிடத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் தம்பதியின் மகனான 8 வயது சிறுவனுக்கும், அவனது நண்பனுக்கும் இடையில் கடந்த வாரம் சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவனைப் பழிதீர்க்க 13 வயது சிறுவன் திட்டமிட்டான்.

இதற்கிடையே, சனிக்கிழமை மதியம் தங்கள் மகன் காணாமல் போனதாகக் கட்டிடத் தொழிலாளர் தம்பதியினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். வீட்டுக்கு வெளியே தனது நண்பனுடன் அவன் விளையாடிக்கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். சிறுவனின் நண்பனை விசாரித்தபோது, போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அருகில் உள்ள காட்டுக்கு அவனை அழைத்துச் சென்ற நண்பன், சண்டைக்குப் பழிதீர்க்க எண்ணி அவனைக் கல்லால் அடித்திருக்கிறான். அதில் படுகாயமுற்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால், பயந்துபோய் அவனது செல்போனையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றான். இவை அனைத்தையும் போலீஸாரின் விசாரணையின்போது அவன் ஒப்புக்கொண்டான்.

நண்பனைக் கொலை செய்த 13 வயது சிறுவன், கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருக்கிறான்.

x