விருதுநகரில் ஏற்கெனவே இளம்பெண் ஒருவரை 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், மற்றொரு பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஆயுதப்படை காவலர் ஒருவரே சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 23 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், " விருதுநகர் ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்துவரும் கண்ணன் என்பவருக்கும், எனக்கும் இடையே ஃபேஸ்புக் வாயிலாக நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்தோம். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, உரிமையுடன் நெருக்கமாகப் பழகிய அவர் ஒரு கட்டத்தில் ஆயுதப்படை அலுவலர் குடியிருப்புக்கே என்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது தொடர்ந்ததால், நான் திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினேன். அதற்கு அவர் உன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. பழைய கதையை எல்லாம் வெளியே சொன்னால், என் செல்வாக்கைப் பயன்படுத்தி உன் மீதே போலீஸ் வழக்கு போட வைப்பேன் என்று மிரட்டினார். இப்படி மிரட்டி மிரட்டியே என்னை பலமுறை வன்கொடுமை செய்தார். தற்போது நான் 2 மாத கர்ப்பமாக இருக்கிறேன்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஆயுதப்படை போலீஸ்காரர் கண்ணனிடம் விருதுநகர் மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். "புகாரில் உண்மை இருப்பதற்கான முகாந்திரம் தெரிந்தால், அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போலீஸார் கூறியுள்ளனர்.