2011-ல் சிறுமி கொலை; 2022-ல் ரூ.10 லட்சம் இழப்பீடு


புதுக்கோட்டையில் 2011-ல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையில் கடந்த 2011-ல் 15 வயது சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். அத்துடன் சிறுமியின் சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டதுடன், வீட்டில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கப்படாத நிலையில் வழக்கு 2011-ல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. இதனால் வழக்கு விசாரணை 2013-ல் சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், சிபிஐ போலீஸாராலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து வழக்கை முடிவுக்கு கொண்டு வருமாறு திருச்சி முதன்மை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் தன் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காததால், தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி சிறுமியின் தந்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். அரசு தரப்பில், மனுதாரருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, “தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு திட்டத்தில் மனுதாரருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே 3 லட்ச ரூபாய் வழங்கப்பட்டிருப்பதால், 7 லட்ச ரூபாயை 2 மாதத்தில் மனுதாரருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

x