மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய மானாமதுரை இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதியவும்


சொத்து பிரச்சினையில் தாய், மகளை தாக்கிய மானாமதுரை காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்ய சிவகங்கை எஸ்பிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த நாகலெட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் மாற்றுத்திறனாளி. எனக்கு திருமணம் ஆகவில்லை. எங்கள் குடும்பத்துக்கும் வீரமணி என்பவர் குடும்பத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை உள்ளது. வீரமணிக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் ஆதிலிங்கம் மற்றும் போலீஸார் 6.1.2022-ல் எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னையும், தாயாரையும் கடுமையாக தாக்கினர்.

எங்களை தாக்கிய காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஎஸ்பியிடம் 7.1.2022-ல் புகார் அளித்தோம். இதுவரை விசாரணை நடத்தவில்லை. எங்கள் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர், அவரது தாயார் இருவரும் போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதற்கு ஆதாரங்கள் உள்ளன. மருத்துவ ஆவணங்களையும், விபத்து பதிவேட்டையும் தாக்கல் செய்துள்ளனர். அவற்றை கருத்தில் கொள்ளாமல் மனுதாரரின் புகாரை டிஎஸ்பி முடித்துள்ளார். இதற்காக மானாமதுரை டிஎஸ்பியை நீதிமன்றம் கண்டிக்கிறது. அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனுதாரர் தாக்கல் செய்துள்ள மருத்துவ ஆவணங்களும், விபத்து பதிவேடும் காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸாரின் அராஜகத்தை வெளிப்படுத்துகிறது. எந்த தவறும் செய்யாத நிலையில் மனுதாரரையும், அவரது தாயாரையும் போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். எனவே, மானாமதுரை காவல் ஆய்வாளர், போலீஸார் மீது மனுதாரர் அளித்த புகார் மீது சிவகங்கை எஸ்பி வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கை 12 வாரத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

x